உடல் நலம் : ஆடி அமாவாசையின் சிறப்பு!

Tuesday, July 30, 2019

ஆடி அமாவாசையின் சிறப்பு!




அமாவாசை' என்பதற்கு 'ஓர் இடத்தில் தங்குதல்' என்பது பொருள். சூரியனும், சந்திரனும் சேர்ந்து ஒரே ராசியில் தங்கும் நாள் அமாவாசை. முன்னோருக்கான பிதுர் கடனைச் செய்து, அவர்களின் ஆசி பெறும் நாள் அமாவாசை.

இறந்தோருக்குரிய திதியில் சிராத்தம் கொடுக்க முடியாதவர்கள் ஆடி, புரட்டாசி, தை மாத அமாவாசை நாளில் வழிபடலாம்.

ஆடி அமாவாசையன்று செய்யும் பிதுர் வழிபாட்டால் முன்வினை பாவம் தீரும். இந்நாளில் விரதமிருக்க உடல் நலம், ஆயுள் பலம் கூடும். முன்னோர் இறந்த நாள், திதி தெரியாதவர்கள் வேத பண்டிதர்கள் மூலம் ஆடி அமாவாசையன்று முன்னோர் பெயரைச் சொல்லி தர்ப்பணம் செய்தால் போதும்.
நவக்கிரகங்களில் சூரியனை 'பிதுர் காரகர்' (தந்தைக்கு அதிபதி) என்றும், சந்திரனை 'மாத்ரு காரகர்' (தாய்க்கு அதிபதி) என்றும் சொல்வர். எனவே சூரியனும் சந்திரனும் இணையும் அமாவாசையில் வழிபட்டால் முன்னோர் மகிழ்ச்சியடைகின்றனர்.

ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயன புண்ணிய காலத்தில் வரும், முதல் அமாவாசை என்பதால் ஆடி அமாவாசைக்கு கூடுதல் சிறப்பு. பிதுர்களுக்கு உகந்த ஆடியில் அவர்கள் தங்களின் சந்ததியினருக்கு ஆசியளிக்க பூமிக்கு வருகின்றனர்.

குடும்பத்தில் சுபவிஷயங்கள் தடை படுவதற்கும், மன நிம்மதியின்றி தவிப்பதற்கும் முன்னோரை வணங்காமல் இருப்பதே காரணம். ஆடி அமாவாசையன்று தர்ப்பணம் செய்யுங்கள். முன்னோர் படங்களுக்கு துளசி மாலை அணிவியுங்கள்.
முன்னோருக்காக விடும் எள், தண்ணீர், பசுக்களுக்கு கொடுக்கும் அகத்திக்கீரையும், ஏழைகளுக்கு இடும் அன்னதானம் இவற்றால் அவர்கள் திருப்தி அடைவதோடு, அவர்களுக்குரிய உணவாகவும் மாறுகின்றன. இதனால் பசி, தாகம் நீங்கி வாழ்த்துகின்றனர்.
இந்த நாளில் புனித நீர்நிலைகளில் நீராடி கோயில் வழிபாடு செய்ய வேண்டும்.

ராமேஸ்வரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேதாரண்யம், கோடியக்கரை, பூம்புகார், திருப்புல்லாணி, திருச்செந்துார் உள்ளிட்ட கடல் தீர்த்தங்களில் நீராடி தர்ப்பணம் செய்வது நல்லது.
காவிரி பாயும் புனித தலங்களான பவானி, கொடுமுடி, ஈரோடு, முக்கொம்பு, ஸ்ரீரங்கம், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை போன்ற தலங்களிலும் தர்ப்பணம் செய்யலாம்.

மதுரை அழகர்கோவில் நுாபுர கங்கையில் நீராட ஆடிஅமாவாசைக்கு முதல் நாளே பக்தர்கள் கூடுவர். அதிகாலையில் நீராடி தர்ப்பணம் செய்து மலை மீதுள்ள ராக்காயி அம்மன், சோலைமலை முருகன், சுந்தரராஜப்பெருமாள், காவல் தெய்வமான 18ம் படி கருப்பணசாமியை வழிபடுவர். திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடிஅமாவாசைக்காக லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவர். பாண தீர்த்த அருவியில் நீராடி முன்னோரை வழிபடுவர். இங்கு ராமபிரான் தன் தந்தையான தசரத சக்கரவர்த்திக்கு பிதுர்கடன் செய்தார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்கு அருகிலுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கத்தை வழிபட்டு நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர். சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் ராமரின் மகன்களான லவ, குசரால் உருவான திருக்குளம் உள்ளது. இத்தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து சிவனை வழிபட்டு தங்களின் பாவத்தைப் போக்கி, தந்தையான ராமபிரானுடன் சேரும் பாக்கியம் பெற்றனர். ஆடி அமாவாசையன்று கோயம்பேடு குறுங்காலீஸ்வரரை வழிபட்டால் பாவம் நீங்கி பிதுர் ஆசியும் கிடைக்கும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், திருவள்ளூர் வீரராகவர், திருவிடைமருதுார் மகாலிங்கம், திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர், திருவெண்காடு வேதாரண்யேஸ்வரர், மதுரை மீனாட்சியம்மன், திருப்பனந்தாளை அடுத்த பந்தநல்லுார் பசுபதீஸ்வரர், திருவாரூர் அருகிலுள்ள திலதர்ப்பணபுரி, கேரளாவிலுள்ள திருவல்லம் பரசுராம சுவாமி, வர்க்கலா
ஜனார்த்தன சுவாமி கோயில்களை தரிசித்தாலும் பிதுர் தோஷம், சாபம் தீரும்.

துர்மரணம் ஏற்பட்டு, அலையும் ஆன்மாக்களுக்கு ஆடி அமாவாசையன்று வேத பண்டிதர்கள் மூலம் பூஜை செய்தால் அவர்களின் ஆன்மா சாந்தி பெறும். இந்நாளில் அன்னதானம் செய்ய வேண்டும். ஏழை அந்தணர்களுக்கு காய்கறிகள், பழங்கள் தானம் அளிப்பது நன்மை தரும்.

பாகற்காய், பூசணி, பரங்கி, பலாக்காய், மாங்காய், வாழைக்காய், சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, அவரைக்காய், வாழைத்தண்டு, மாதுளை, வாழை, எலுமிச்சை, நெல்லிக்கனிகள் போன்றவற்றை வழங்கலாம். ஆடைகள், அரிசி, வெல்லம், கோதுமை, நவதானியம், எள், மிளகு, சீரகம், ஏலம், தேன் நெய், திராட்சை, பசும்பாலையும் தானம் தரலாம்.
ஆடி அமாவாசையன்று தானம் கொடுங்கள்; முன்னோர் ஆசி பெறுங்கள்.

No comments:

Post a Comment