உடல் நலம் : ஒற்றுமையே பலம்....

Monday, November 4, 2019

ஒற்றுமையே பலம்....



விறகு சொன்ன பாடம்


ஒற்றுமையே பலம் என்பதை விளக்கும் கதை இது (விறகு சொன்ன பாடம்).  ஒற்றுமை என்றைக்கும் வலிமை வாய்ந்தது. அனைவரும் ஒன்றுபட்டால் கிடைக்கும் நன்மைகள் பல. இனி கதை பற்றிப் பார்ப்போம்.
மஞ்சளுர் என்ற ஊரில் பெரியவர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் எப்போதும் ஒருவருடன் ஒருவர் சண்டை இட்டுக் கொண்டே இருந்தனர்.
பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கண்ட பெரியவர் மிகவும் மனவருத்தத்திற்கு உள்ளனார்.
எப்படியாவது பிள்ளைகளிடையே ஒற்றுமையை உருவாக்க எண்ணினார். அவருடைய மனதில் திட்டம் ஒன்று உருவானது.
அத்திட்டத்தை செயல்படுத்த எண்ணிய அவர் விறகு கட்டு ஒன்றை எடுத்து வீட்டின் முற்றத்தில் வைத்தார்.
தன்னுடைய பிள்ளைகளை எல்லோரையும் முற்றத்திற்கு அழைத்தார்.
முதலாவது மகனை அழைத்து விறகு கட்டை உடைக்கச் சொன்னார்.அவனும் விறகுக் கட்டை உடைக்க முயற்சித்தான். ஆனால் அவனால் விறகுக் கட்டை உடைக்க முடியவில்லை.
பின்னர் இரண்டாமவனை அழைத்து விறகுக் கட்டை உடைக்கச் சொன்னார். அவனாலும் உடைக்க முடியவில்லை.
இவ்வாறாக மூன்றாமவனும், நான்காமவனும் விறகுக் கட்டை உடைக்க முடியாமல் திணறினர்.
பெரியவர் முதலாமவனிடம் விறகுக் கட்டை பிரித்து ஒரு விறகினை எடுத்து உடைக்கச் சொன்னார்.
முதலாமவனும் தந்தை சொல்லியவாறே விறகுக் கட்டினைப் பிரித்து ஒரு விறகினை எடுத்து எளிதாக உடைத்தான்.
இவ்வாறாக இரண்டாமவன், மூன்றாமவன், நான்காமவனும் விறகுக் கட்டிலிருந்து ஒரு விறகினைத் தனியே எடுத்து எளிதாக உடைத்தனர்.
பெரியவர் தன் பிள்ளைகளிடம் “பார்த்தீர்களா விறகுக் கட்டில் விறகுகள் மொத்தமாக இருந்ததால் அவற்றை உங்களால் உடைக்க இயலவில்லை.
அதே நேரத்தில் விறகுக் கட்டிலிருந்து பிரித்து தனியே எடுத்த விறகினை நீங்கள் எளிதாக உடைத்து விட்டீர்கள். ஒற்றுமையின் பலத்தினை இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள்.
நாம் ஒற்றுமையாக இருக்கும் வரை எதிரியால் நம்மை ஒன்றும் செய்ய இயலாது. நாம் சண்டையிட்டு தனித்தனியே பிரியும் போது எதிரிகள் நம்மை எளிதில் வீழ்த்துவர்.
ஆதலால் நீங்கள் உங்களுக்குள் சண்டை இட்டுக் கொள்வதை விட்டு விட்டு ஒற்றுமையுடன் வாழுங்கள். வாழ்வில் வெற்றி பெறுங்கள்.” என்று கூறினார்.
ஒற்றுமையின் சக்தியை விறகு சொன்ன பாடம் கதையிலிருந்து தெரிந்து கொண்டீர்கள் தானே.
ஆதலால் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழிக்கு ஏற்ப எப்போதும் ஒற்றுமையுடன் திகழுங்கள். வாழ்வில் முன்னேறுங்கள்.

No comments:

Post a Comment