நிர்வாகத்தில் தன் தந்தை ராஜராஜனையே மிஞ்சி நிற்கிறான் ராஜேந்திர சோழன். அரசனாக கோலோச்சிய 30 ஆண்டுகளில் முதல் 10 ஆண்டுகள் கடும் போரில் கழித்தாலும் இறுதி 15 ஆண்டுகள் அவன் அமைதியான, அற்புதமான ஒரு நல்லாட்சியை வழங்கினான். வேளாண் தொழிலும், வணிகமும் தழைத்தோங்கின.
வென்ற நாடுகளில் இருந்து திறையாக வந்த செல்வம் ஒரு பக்கம் குவிந்தது. அதை முழுமையாக விவசாய மேம்பாட்டுக்கும், பாசன உருவாக்கத்துக்கும், கோயில்கள் கட்டுவதற்குமே ராஜேந்திரன் செலவிட்டான். கலைஞர்களும், கல்வியாளர்களும் வளமோடும் மரியாதையோடும் வாழ்ந்தார்கள்.
வல்லவராயன் வந்தியத்தேவன், கிருஷ்ணன் ராமன், அரையன் ராஜராஜன், உத்தமச்சோழன் கோன், உத்தமச்சோழ மிலாடுடையான், சத்திரிய சிகாமணி கொங்காள்வான் போன்ற வீரமும் அறிவும் செறிந்த தளபதி களை அமைச்சர்களாக்கி தம்மருகே இருத்திக் கொண்டான். மாராயன் அருண்மொழி என்பவனை தன் அரசியல் ஆலோசகனாக அமர்த்திக் கொண்டான்.
மாராயன் அருண்மொழி, பிரதம அமைச்சன் கிருஷ்ணன் ராமனின் மகன். நுட்பமான அரசியல் அறிவும், நிர்வாகத் திறமையும் மிக்கவன். ராஜேந்திரனோடு சேர்ந்தே வளர்ந்தவன். ராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் அருண்மொழியின் ஆதிக்கமே மிகுந்திருந்ததாக வரலாற்றாசிரியர்கள் எழுதுகிறார்கள்.
இவன் திறனில் மகிழ்ந்த ராஜேந்திரன், ‘உத்தம சோழ பிரம்மராயன்’ என்ற பட்டத்தை அவனுக்கு வழங்கி அழகு பார்த்திருக்கிறான்.
‘‘ராஜேந்திரன் காலத்துப் பட்டயங்கள், கல்வெட்டுக்களைப் படிக்கிறபோது அவனுடைய ஒழுங்குபடுத்தப்பட்ட நிர்வாக அமைப்பு பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது. அவன் அரச சபையில் மட்டுமின்றி போர்ப்படையிலும் கட்டுப்பாடும்,
ஒழுங்கும் இருந்திருக்கிறது. முனை திரியான் (போர்முனைக்குச் சென்று வெற்றியின்றி திரும்பாதவன்), மாமுனைக்காரன், (முனையில் நின்று தோற்கடிப்பவன்), சிட்புலியன் (சிட்புலி நாட்டை வென்று திரும்பியவன்), வில் விஜயன் (விற்படையில் சிறந்தவன்) இப்படி 20 குடிப்பெயர்களில் படைவீரர்களைப் பிரித்திருக்கிறான். அவர்களின் சந்ததிகள் வளம் அளித்து பாதுகாக்கப்பட்டார்கள். அந்தக் குடிகளின் வரலாற்று மிச்சங்கள் இப்போதும் இந்தப் பகுதிகளில் உண்டு.
அவர்களின் வாரிசுகள் இந்தக் குடிப்பெயர்களை இன்னமும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். வென்ற நாடுகளில் இருந்து ஏராளமான செல்வங்கள் திறையாக குவிந்தது. இருந்தாலும் உள்நாட்டு உற்பத்தியே நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்பதில் ராஜேந்திரன் மிகத்தெளிவாக இருந்திருக்கிறான். அதனால்தான் வணிகத்தையும் வேளாண்மையையும் போற்றி வளர்த்திருக்கிறான். பண்டமாற்று வணிகம் தேய்ந்து நாணயங்கள் புழக்கத்தில் வந்து விட்ட காலம்.
கப்பல் கப்பல்களாக பட்டுத் துகில்களை அனுப்பி, வாசனை திரவியங்களையும், பீங்கான் பொருட்களையும், அரிய கலைப்பொருட்களையும் வாங்கிக் குவித்திருக்கிறார்கள் சோழ வணிகர்கள். அந்த வணிகத்துக்கு இடைஞ்சலாக எது வந்தாலும் அதை அழித்தொழித்தான் ராஜேந்திரன். சீனாவுக்கும் சோழ தேசத்துக்கும் நீண்ட வணிக உறவு உண்டு. இரண்டுக்கும் இடைப்பட்ட நாடுகள் அதைக் குலைக்க முயன்றபோது, படை நடத்திச் சென்று அதை அடக்கினான். தீவுப் போர்கள் பல, அந்த நோக்கத்தில் நடந்தவைதான்.
போரில்லாக் காலங்களில் வீரர்களை வேளாண் பணிகளில் ஈடுபடுத்தினான் ராஜேந்திரன். ராஜேந்திரனின் வீரர்கள் வெட்டிய சோழ கங்கம் ஏரி (இப்போது பொன்னேரி) இப்போதும் விவசாய நீராதாரமாக இருக்கிறது. இந்த ஏரிக்கு நீர் கொண்டு வருவதற்கு கொள்ளிடத்தில் இருந்து தென்புறமாகவும், வெள்ளாற்றில் இருந்து வடபுறமாகவும் இரு கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன. இன்று அந்தக் கால்வாய்கள் தூர்ந்து விட்டன. ஆனால் அதற்குச் சாட்சியாக கால்வாயின் சுவர்கள் இருக்கின்றன. இந்த சோழ கங்கம் ஏரியின் வடிகாலாக இருந்ததே, இப்போதிருக்கும் வீராணம் ஏரி.
ஒரு சமவெளிப் பரப்பில் வலிமை வாய்ந்த கரைகளை அமைத்து, நீண்ட கால்வாய் வெட்டி ஏரி அமைப்பதென்பது, எந்திரங்கள் இல்லாத அந்தக்காலத்தில் உண்மையிலேயே அசுரப்பணி. வேளாண் மக்கள் நலன் கருதி அதை சாதித்தான் ராஜேந்திரன். மிகவும் வலிமை மிக்க ராஜேந்திரனின் போர் வீரர்களாலன்றி வேறு யாராலும் இது சாத்தியப்படாது.
தஞ்சையை நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் விவசாய மண்டலமாக மாற்றியதில் அவன் மூதாதைகளைப் போல ராஜேந்திரனுக்கும் பங்கிருக்கிறது. கரைபுரண்டு ஓடிய காவிரி, கல்லணை கடந்து, ஒரு நேர்கோட்டில் போய் கடலில் விழுந்து கொண்டிருந்தது. அந்நதியை கீறிக்கொண்டு வந்து பிற நிலப்பரப்புகளையும் வேளாண் பூமியாக்கினான் ராஜேந்திரன்.
தம் வீரர்களைக் கொண்டு நிறைய கால்வாய்களை வெட்டினான். முடிகொண்டான், திருமலைராஜன், குடமுருட்டி, அரசலாறு போன்ற வாய்க்கால்கள் ராஜேந்திரன் காலத்தில் உருவாக்கப்பட்டவைதான்...’’ என்கிறார், ராஜேந்திரன் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டுவரும் பொறியாளர் கோமகன். ராஜேந்திரன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை கோலகலமாகக் கொண்டாடிய குழுவின் ஒருங்கிணைப்பாளர்.
மேலை சாளுக்கியம் என்று அழைக்கப்பட்ட கர்நாடகம் இப்போது செய்வதைப் போலவே அப்போதும் காவிரியை மறித்துக் கொண்டு அடாவடி செய்தது. ஆங்காங்கே மண்ணால் தடுப்பணைகள் கட்டி தடுத்தார்கள். அவ்வப்போது சோழ தேசத்து வீரர்கள் படை நடத்திச் சென்று தடுப்பணைகளை உடைத்தெறிந்து வந்தார்கள். இதற்கு நிரந்தரத் தீர்வு காண ராஜேந்திரன், மேலை சாளுக்கியத்தின் மீது படை நடத்தி, மடை உடைத்தான்.
பரந்து விரிந்து கிடந்த தம் நாட்டை நிர்வாக வசதிக்காக மண்டலங்களாகப் பிரித்தான் ராஜேந்திரன். ஈழம்-மும்முடிச் சோழ மண்டலம்; வேங்கை நாடு- வேங்கை மண்டலம்; நுளம்பபாடி- நிகரிலிச் சோழ மண்டலம்; தொண்டை நாடு-ஜெயங்கொண்ட சோழ மண்டலம்; கொங்கு நாடு-அதிராஜராஜ மண்டலம்; சேரநாடு-மலை மண்டலம்; பாண்டிநாடு-ராஜராஜப் பாண்டி மண்டலம் என 9 மண்டலங்கள் இருந்தன. மண்டலத்துக்கு தலைவன், ‘நாடாள்வான்’.
ஒவ்வொரு மண்டலமும் நிலப்பரப்பின் அளவுக்கேற்ப வளநாடுகளாக பகுக்கப்பட்டிருந்தது. இந்த வளநாட்டின் நிர்வாகி, ‘ஊரதிகாரி’ என்று அழைக்கப்பட்டான். திறை சேகரிப்பது, கோயிலை நிர்வகிப்பது, வேளாண் பணிகளில் வரும் சிக்கலை நீக்குவது; வணிகர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது, உள்நாட்டில் வரி வசூலிப்பது ஆகியவற்றை நாடாள்வான் கவனிப்பான்.
ராஜேந்திரனின் நிர்வாக த்துக்கு உற்ற துணையாக நின்றது ஐவர் குழு. இந்தக் குழுவின் அவன் நம்பிக்கைக்குரிய ஓர் அமைச்சர், தலைமை பிராமணர், தலைமைப் படைத்தளபதி, தலைமைத் தூதன், தலைமை ஒற்றன் ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள். இந்த ஐவர் குழுவே ஆட்சியின் போக்கைத் தீர்மானித்தது. ‘‘ராஜேந்திரன் பிற மன்னர்களைப் போல அரண்மனைக்குள் அமர்ந்து கொண்டே ஆட்சி நடத்தவில்லை. ஊர் ஊராகச் சுற்றினார்.
அவர் காலத்துக் கல்வெட்டுகளையும் செப்பேடு களையும் பார்க்கும்போது அதை உணர முடிகிறது. இடம் பெயர்ந்து கொண்டே இருந்ததால் மக்களின் வாழ்க்கைச் சூழலை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அதன்மூலம் பல நலத்திட்டங்களை உருவாக்க முடிந்தது.
சோழ மன்னர்களிலேயே ராஜேந்திரனுக்கு மட்டுமே உரித்தான இன்னொரு சிறப்பும் இருக்கிறது. சோழர்களின் தலைநகரம் எதுவென்று கேட்டால் தஞ்சாவூர் என்பார்கள். உண்மையில், தஞ்சாவூர் என்பது முத்தரையர்களின் தலைநகரம். விஜயாலயச் சோழன் அதைக் கைப்பற்றி விரிவுபடுத்தி தன் தலைநகராக்கிக் கொண்டான். தஞ்சை, உறையூர் தலைநகராக இருந்த காலத்திலும் கூட பழையாறையில்தான் சோழர்களுக்கு வசிப்பிடங்கள் இருந்தன.
முதன்முதலில் சோழர்களுக்கே உரித்தான தனித்தன்மை வாய்ந்த ஒரு தலைநகரத்தை நிர்மாணித்தவன் ராஜேந்திரன்தான். பிற்காலச் சோழர்கள் ஆண்ட 430 ஆண்டுகளில் 170 ஆண்டுகள் தலைநகராக இருந்தது தஞ்சையும், உறையூரும். 260 ஆண்டுகள் கங்கை கொண்ட சோழபுரம்தான் தலைநகராக இருந்தது. சோழர்களுக்கு மட்டுமல்ல, தெற்காசியப் பிராந்தியத்துக்கே அதுதான் தலைநகராக இருந்தது. சோழர்களின் இறுதிக்காலமும் அங்கு தான் நிறைவுற்றது. அந்த வகையில் சோழர் வரலாற்றில் ராஜேந்திரனுக்கும் கங்கை கொண்ட சோழபுரத்துக்கும் தனித்த ஓர் இடமுண்டு...’’ என்கிறார் கோமகன்.
No comments:
Post a Comment