நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை யாரிடம் பாடம் கற்பது என்ற கதையின் அறிந்து கொள்ளலாம். வாருங்கள் கதையைப் பற்றிப் பார்ப்போம்.
கருப்பூர் என்ற ஒரு ஊரில் பச்சையப்பன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு கடவுள் பக்தி அதிகம். மேலும் அவர் கடுமையான உழைப்பாளியும் கூட. அடிக்கடி கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்வார்.
ஒருநாள் அவர் மஞ்சளுர் செல்ல வேண்டியிருந்தது. காட்டுப் பகுதியைத் தாண்டியே மஞ்சளுருக்கு செல்ல வேண்டும். எனவே அதிகாலையில் எழுந்து மஞ்சளுரை நோக்கிப் பயணமானார்.
அப்போது அவர் மரத்திற்கு கீழே நரி ஒன்று அமர்ந்திருந்ததைப் பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால்கள் இரண்டும் இல்லை. ஏதோ விலங்கிடம் போரிட்டபோது அது தன்னுடைய முன்னங்கால்களை இழந்திருந்தது.
அப்போது திடீரென அவருக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. அதாவது “இந்த நரிக்கு இரண்டு கால்கள் இல்லை. அப்படினா எப்படி இது தனக்கான இரையை வேட்டையாடி உண்ணும்” என்பதுதான் அது.
இவ்வாறு அவர் யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் அந்தப் பக்கமாக புலி ஒன்று வந்தது. புலியைக் கண்டதும் புதருக்கு அருகில் பச்சையப்பன் ஒளிந்து கொண்டார்.
புலி ஒரு பெரிய மானை அடித்து இழுத்துக் கொண்டு வந்து அதனைச் சாப்பிட்டது. சாப்பிட்டது போக மீதியை அப்படியே விட்டுவிட்டுச் சென்றது. புலி விட்டுச் சென்ற மீதியை நரி மெதுவாக நகர்ந்து வந்து சாப்பிட்டது.
இதனைக் கண்டதும் பச்சையப்பன் “கால் இல்லாத நரிக்கே இறைவன் உணவினை அளிக்கும்போது பக்திமானான தனக்கு இறைவன் கண்டிப்பாக உணவளிப்பார். நாம் எதற்கு கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும்?” என்று எண்ணினார்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் உழைக்கவே இல்லை. கோவிலுக்குச் சென்று மூலையில் அமர்ந்து கடவுள் நமக்கு உணவளிப்பார் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
நாட்கள் நகர்ந்தன. அவர் மிகவும் இளைத்து துரும்பானார். உணவு மட்டும் கிடைக்கவே இல்லை.
ஒருநாள் கடவுளிடம் “இறைவா, என்னுடைய பக்தியில் உனக்கு நம்பிக்கை இல்லையா. நான் இப்படியே பட்டினி கிடந்து சாக வேண்டியது தானா? எனக்கு உணவு அளிக்க மாட்டாயா?
“காட்டுல புலி மூலமாக நரி உணவு கிடைக்கச் செய்தியே. அதனைப் பார்த்துட்டு தானே நான் இங்கு வந்தேன். என்னை இப்படி தவிக்க விட்டுட்டியே. இது நியாயமா?” என்று இறைந்து வேண்டினார்.
அப்போது கடவுள் அவர் முன் தோன்றினார். அவரிடம்
“பச்சையப்பா, உனக்கு யாரிடம் பாடம் கற்பது என்று தெரியவில்லை. நீ கற்று கொள்ள வேண்டியது நரியிடம் இருந்து இல்லை. புலியிடம் இருந்து.
நீ புலி போல் உழைத்து உன்னுடைய தேவைக்குப் போக மீதியை ஏழைக்களுக்கு தானமாகக் கொடு.” என்றார்.
No comments:
Post a Comment