உடல் நலம் : இடுப்பு வலி வேதனை - சிறந்த மருத்துவம்

Monday, November 25, 2019

இடுப்பு வலி வேதனை - சிறந்த மருத்துவம்



பெரும்பாலான பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள ஒரு தீராத உடல் வலி, இடுப்பு வலி. தரையில் அமர்ந்தால் எழ முடியாது, சற்று நேரம் நிற்கும் நிலை ஏற்பட்டால், இடுப்பு வலி வந்து, வேதனை தந்துவிடும். இடுப்பு வலி தரும் துன்பம், அத்தகையது.

பொதுவாக இக்காலப் பெண்கள், அதிக உயரம் கொண்ட மிதியடிகளை அணிகிறார்கள், இதன் காரணமாக, பின்னங்கால்கள் உயர்ந்தும், கால் விரல்கள் தாழ்ந்தும் இருப்பதால், நடக்கும்போது, பாதங்களில் மிக அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, அதனால், காலில் ஏற்படும் வலி, இடுப்பில் வந்து முடிகிறது.

இதுபோன்ற பாதிப்புகளை சரிசெய்ய, நல்லெண்ணையில் ஒன்றிரண்டு மிளகுகள் இட்டு காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர, இடுப்பு வலி பாதிப்புகள் விலகும்

 கொள்ளு குதிரைக்கு தீவனம் மட்டுமல்ல, மனிதருக்கு சிறந்த உடல் நல மருந்தும் கூட. இடுப்பு வலியை குணமாக்குவதில், சிறந்த பங்கு வகிக்கிறது, கொள்ளு.

அதிக உடல் எடையும் இடுப்பு வலிக்கு ஒரு காரணமாக இருக்கிறது, உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடு இல்லாமல் உண்பது, அதிகமாக மது அருந்துவது போன்ற காரணங்களால், உடல் எடை சிலருக்கு அதிகரித்து விடும். இதன் காரணமாக உடலில் கொழுப்புச் சத்து மிகுந்து அது வெளியேற முடியாமல், உடலை வீங்கச்செய்யும். இதனால்கூட, சிலருக்கு இடுப்பு வலி வரலாம்.

 அதிக எடை கொண்டவர்கள், உணவில் "கொள்"ளை அவ்வப்போது சேர்த்துவர, உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்கள் கரைந்து வெளியேறி, உடல் பருமன் வற்றி, உடல் உறுதியாகும். இடுப்பு வலியும் விலகும்.

வாரமிருமுறை உணவில் கொள்ளு இரசம் செய்து சாப்பிட்டு வர, இடுப்பு வலியைப் போக்கலாம்.

 இடுப்பு வலியைப் போக்க மேலும் சில வழிமுறைகள்:

வெகு சுலபமான ஒரு வழி, பச்சைக் கற்பூரத்தை புதினா இலைச் சாற்றில் கலந்து அந்த கலவையை, இடுப்பைச்சுற்றி தடவி வர, இடுப்பு வலி குறையும்.

ஓமத்தன்ணீரை சிறிது தேங்காயெண்ணையில் கலந்து சூடாக்கி, அதில் பச்சைக் கர்ப்பூரத்தை சேர்த்து, வலியுள்ள இடங்களில் தேய்த்து வர, இடுப்பு வலி விலகிவிடும்.

 தழுதாழைக் குளியல்:

தழுதாழை என்பது சிறு செடி வகை, இவை வயல்வெளிகளில் புதர்களில் மண்டி இருக்கும், உடல் வலிகளுக்கு சிறந்த நிவாரணம் தருபவை, இந்த தழுதாழை இலைகள்.

இவற்றைக் கொதிக்கும் நீரில் ஊற வைத்து, அந்த நீரில் தினமும் குளித்து வர, இடுப்பு வலி மட்டுமன்றி, உடல் வலி அனைத்தும் தீர்ந்து விடும்.

மேலும், தழுதாழை இலைகளை பூண்டு, சிறிது இந்துப்பு சேர்த்து துவையல் போல அரைத்து, அந்த துவையலை சாதத்தில் கலந்து, நல்லெண்ணை ஊற்றிச் சாப்பிட்டு வர, இடுப்பு வலி விரைவில் விலகும்

 வாத நாராயண இலைகள்:

வாதநாராயணா மரத்தின் இலைகள், நுணா இலைகள் இவற்றைப் பறித்து, இலைகளை நீரில் இட்டு, உடல் பொறுக்கும் சூட்டில், அந்த நீரை உடலில் வலியுள்ள இடுப்புப்பகுதியில் மசாஜ் செய்வதுபோல, மென்மையாகத தடவி, ஒத்தடம் கொடுத்துவர, இடுப்பு வலிகள் தீரும்.

 புளிய இலைகள்:

புளிய இலை, நொச்சி இலை இவைகளைச் சேர்த்து, நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரில் ஒத்தடம் கொடுத்து வரலாம், அல்லது அந்த நீரில் குளித்தும் வரலாம், இதன் மூலம், இடுப்பு வலியின் வேதனை குறைந்து, படிப்படியாக, வலி விலகிவிடும்.

 புதினா உப்பு :

விளக்கெண்ணையைக் காய்ச்சி, அதில் சிறிது புதினா உப்பைக் கலந்து, இடுப்பில் வலியுள்ள இடங்களில் தடவி வரலாம், இதன் மூலம், இடுப்பு வலி தீரும்.

பெண்களுக்கு மாதாந்திர விலக்கின் போது இடுப்பு வலி ஏற்படலாம், இதற்கு அசோகமரப் பட்டைகளைத் தூளாக்கி, அத்துடன் பெருங்காயத் தூளைக் கலந்து வெண்ணையில் வைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர, இடுப்பு வலி குறையும்

 முருங்கைப் பட்டை :

முருங்கைப் பட்டை சுக்கு இவற்றைத் தூளாக்கி, அதை எண்ணையில் கலந்து இடுப்பில் தடவி வந்தாலும், இடுப்பு வலி குணமடையும்.

எருக்கம் இலைகளை விளக்கெண்ணையில் தோய்த்து, அதை சூடாக்கி, இடுப்பில் வலியுள்ள இடங்களில் வைத்து வர, இடுப்பு வலி உடனே விலகி விடும்.

இதுபோன்ற எளிய முறைகளில் இடுப்பு வலி பாதிப்புகளை விலக்கி நலம் பெறலாம். சில வகை உடற்பயிற்சிகளும், ஆசனங்களும், இடுப்பு வலியைக் குறைக்கக் கூடியவை. ஆயினும், அவற்றை இடுப்பு வலி அதிகம் உள்ள சமயங்களில் செய்வது, மேலும் சிரமத்தை ஏற்படுத்தி விடலாம்.

வலி சற்று குறைந்ததும், முறையான பயிற்சியாளரிடம் சென்று பயிற்சி பெற, இடுப்பு வலிகளை நிரந்தரமாக உடலில் இருந்து, விரட்டி விடலாம்.

இதுபோன்ற முறைகளில், இடுப்பு வலி பாதிப்பை உடலில் இருந்து விலக்கி விட்டாலும், தொடர்ந்து சில வழிமுறைகளை, முறையாகக் கடைபிடித்து வர, இடுப்பு வலியை வரவிடாமல் தடுக்கலாம்.

 எண்ணெய் குளியல் :

உடலில் சேரும் வாயுவை வெளியேற்றும் தன்மை, எண்ணைக் குளியலுக்கு உண்டு. முன்னோர்கள் வாராவாரம், உடலுக்கு எண்ணை தேய்த்துக் குளிக்கச் சொன்னதன் காரணம், உடலில் உள்ள சூட்டையும் வாயுவையும் வெளியேற்றவே. அதைச் செய்யத்தவறியதன் விளைவுதான், இன்றைய வியாதிகள்.

வாராவாரம் சனிக்கிழமைகளில், இளஞ்சூடாக காய்ச்சிய நல்லெண்ணையை உடலில் தடவி, தலையில் மயிர்க்கால்கள் வரை அழுத்தித்தேய்த்து, சற்று நேரம் ஊற வைத்து, சீயக்காய் அரப்பு தேய்த்துக் குளிக்க வேண்டும்.

எண்ணை தேய்த்துக் குளிக்கும் சமயங்களில், சோப்பு மற்றும் ஷாம்பூ கொண்டு குளிப்பது என்பது, சூடான டீயைப் பருகியபின், ஜில்லென்ற ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்கு ஒப்பாகும். கிடைக்கும் பயனும் விலகி, உடல் நலம் கெடும்.

இப்படி குளித்து வருவதன் மூலம், இடுப்பு வலியை உடலில் இருந்து விரட்டலாம்.
 உணவு :

மிதமான உணவை, அளவோடு சாப்பிட்டு உடல் நலத்தைப் பேணிவரவேண்டும். பயிற்சி இல்லாமல் அதிக எடையை தூக்குவது போன்ற செயல்கள், இடுப்பு வலியை, தேடி வாங்கிக்கொள்வதற்கு ஒப்பாகும்.

நீண்ட நேரம் உட்கார்ந்து பணிசெய்யும் சூழலில், சற்று நேரம் எழுந்து நின்று சிறிது நடப்பது, நலம் தரும். எப்போதும் நேராகவே, உட்கார்ந்திருக்க வேண்டும்.

செயற்கை இழை மெத்தைகளில் படுத்து உறங்காமல், இயற்கை இலவம் பஞ்சு மெத்தைகளில் உறங்கலாம், குப்புறப்படுக்காமல், ஒருக்கணித்துப் படுப்பது, நலம் தரும்.

தினமும் சற்று தொலைவு நடப்பது, எல்லா உடல் உறுப்புகளுக்கும் நன்மை தரும் ஒரு செயலாகும்.

 துரித உணவு :

துரித உணவைக் கண்டிப்பாக விலக்குவது, நலம் தரும். அதைவிட நன்மை தரும் மற்றொரு செயல், குளிர்சாதனப் பெட்டியில், நெடுநாட்கள் வைத்துப் பயன்படுத்தி வரும் உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது.

உடலுக்கு நன்மை அளிக்கும் செயல்களை செய்து, உடலுக்கு பாதிப்பு தருபவைகளை விலக்கி விட்டால், இடுப்புவலி என்பது, எப்போதும் நெருங்காமல், நிம்மதியாக வாழ முடியும்.

No comments:

Post a Comment