உடல் நலம் : குழந்தைகள் கனவு காணுமா?

Sunday, October 6, 2019

குழந்தைகள் கனவு காணுமா?




வயது வந்தவர்களைக் காட்டிலும் புதிதாகப் பிறந்த குழந்தைகள் அதிகமாக கனவு காணுகின்றன. பிறந்து ஒரு வாரமே ஆன குழந்தை சராசரியாக ஒரு நாளைக்கு 16 மணி நேரம் தூங்கும்.

பல்வேறு ஆய்வுகளின்படி நம் தூக்கம் பல கட்டங்களாக அமைந்துள்ளது. அதில் ஆர்.இ.எம். (REM-Rapid Eye Movement) என்னும் ஒரு கட்டத்தில் நமக்கு கனவுகள் வருகின்றன. வயது வந்தவர்களில் தூக்க நேரத்தில் சராசரியாக 20 சதவீத அளவில்தான் அந்த ஆர்.இ.எம். என்னும் காலகட்டம் வரும். ஆனால் பிறந்த குழந்தைக்கு அந்த ஆர்.இ.எம். காலகட்டம் 50 சதவீதம் வரையில் தூக்கத்தில் இருக்கும்.

இந்த ஆர்.இ.எம். தூக்க காலகட்டத்தில்தான் குழந்தைகள் சிரிப்பது, காலை உதைப்பது மற்றும் உடலை அசைப்பது போன்ற நிகழ்வுகளை நிகழ்த்துகின்றன. இது போன்ற உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இயக்கங்களைக் கண்டு, குழந்தைகள் கனவு காண்கின்றன என்று நாம் அறியலாம். கருவில் உள்ள குழந்தைகள் கூட தங்கள் தூக்கத்தில் சுமார் 10 மணி நேரம் ஆர்.இ.எம். நிலையில் உள்ளன.

வளர்ந்த மனிதர்களைப்போல குழந்தைகளும் ஒரு மங்கலான நினைவலைகளை கனவாகப் பார்க்கின்றன என்று நாம் கருதலாம். ஆனால் சில நரம்பியல் விஞ்ஞானிகள் ‘குழந்தைகள் கனவு காண்பதே இல்லை’ என்று கூறுகின்றனர். அப்படியே குழந்தைகள் கனவு கண்டாலும், அந்த குழந்தைகள் பார்க்கும் கனவில் நாம் பார்ப்பது போல் ஒரு படமோ, ஒரு நிகழ்வோ அல்லது செயல்பாடு போன்றவை இருக்காது என்று கூறுகின்றனர்.

கனவு ஒருவரால் காணப்படுகிறது என்றால் அந்த நபருக்கு கொஞ்சமாவது கற்பனை நயம் இருத்தல் அவசியம். அதாவது அவரால் நிகழ்வுகளை வான்வெளியில் நினைத்து காணத்தெரியவேண்டும். அப்போதுதான் கனவை உணரும் சக்தி அவருக்கு அமையும்.

குழந்தைகளின் பார்வைத்திறன் மற்றும் கற்பனை திறன் அந்தஅளவுக்கு இல்லாத காரணத்தால், நாம் காணும் கனவு போல் குழந்தைகள் கனவு காண்பது இல்லை. மேலும் உணர்வு மற்றும் உணர்ச்சி போன்றவைகளும் குழந்தைக்கு குறைவாக இருப்பதால், குழந்தையால் ஒரு கனவை உருவாக்கும் அளவுக்கு திறமை போதாது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எனவே குழந்தைகளிடம் அறிவாற்றல், சிந்தனைத்திறன் இன்னும் முழுமையாக வராத காரணத்தால், குழந்தைகள் கனவு காண்கின்றன என்று நாம் நினைக்கும் நிகழ்வு நடக்காத ஒரு நிகழ்ச்சியே.

நான்கு அல்லது ஐந்து வயது குழந்தைகள் காணும் கனவு கூட ஒரு படம் பார்க்கும் நிகழ்வு போலவே இருக்கும். அந்தக் கனவில் நடிப்பதும் அல்லது செயல்கள் நிகழ்வது ஒன்றும் இருக்காது. ஒரு கதை சொல்ல இயலாத கனவாகவே அது அமையும். அப்படி என்றால் தூக்கத்தில் நாம் குழந்தையிடம் காணும் அந்த இயக்கங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கான ஒரு அறிகுறியே.

தன் கை கால்கள் மற்றும் தசைகளின் இயக்கத்தை குழந்தை கற்றுக்கொள்ளும் நிகழ்வுகளே அவை எனக்கூறலாம். குழந்தை பிறந்து வளரும் ஆரம்ப காலகட்டத்தில் பல வகையான வளர்ச்சிகள் நிகழ்கின்றன. குறிப்பாக அந்த ஆர்.இ.எம். காலகட்டத்தில் குழந்தைகளுக்கு கனவு காணும் அளவுக்கு மூளை உபயோகப்படுவதில்லை.

ஏழு வயது வரும்வரை பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஒரு (3டி) முப்பரிமாணத்துடன் காணக்கூடிய அளவுக்கு கனவுகள் வருவதில்லை. ஏனெனில் ஏழு வயதுக்குப் பின்னர்தான் குழந்தைகள் உணர்வு பற்றி முழுவதும் அறிய ஆரம்பிக்கின்றனர், தங்களது சுற்றுப்புறம் பற்றியும் உணர ஆரம்பிக்கின்றனர். மூளை நன்கு வளர்ச்சி பெற்ற பின் நம்மைப் போன்றே குழந்தைகள் கனவுகள் காணத் தொடங்கி விடுவர்.

நம்மிடம் மூளை தரும் சமிக்ஞைகளை படமாக மாற்றும் தொழில்நுட்பம் வரும் வரையில் நம்மால் குழந்தைகள் கனவு காண்கின்றன என்பதையும் உறுதியுடன் அந்த கனவுகள் எப்படிப்பட்டது என்பதையும் சொல்ல இயலாது என்பதே இப்போதைய உண்மை.

No comments:

Post a Comment