உடல் நலம் : சனிதோஷ துன்பத்தை தீர்க்கும் குச்சனூர் சனீஸ்வரன்!

Sunday, October 13, 2019

சனிதோஷ துன்பத்தை தீர்க்கும் குச்சனூர் சனீஸ்வரன்!

குச்சனூர் சனீஸ்வரன்





நவகிரகங்களில் மிகமுக்கியமானவர் சனீஸ்வர பகவான். ஈஸ்வர பட்டம் பெற்ற குச்சனூர் சனீஸ்வரன் சிறப்பை உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம். வடநாட்டில் மணி என்ற நகரத்தை தலைநகராகக் கொண்டு கலிங்க நாட்டை ஆட்சிசெய்து வந்தார் தினகரன் என்ற மன்னர்.

நல்லாட்சி செய்து வந்தபோதும் அவருக்கு ஒரே ஒரு குறை இருந்தது. திருமணமாகி நீண்ட காலம் ஆகியும் புத்திரப்பாக்கியம் இல்லாததுதான் அது. ஒருநாள் அரசர் தினகரனுக்கு கடவுளின் சித்தத்தால் அசரீரி ஒன்று கேட்டது. அதில் 'உன் வீட்டுக்கு ஒரு சிறுவன் வருவான். நீ அவனை தத்தெடுத்து வளர்க்க வேண்டும், அதனால் உன் குறை தீரும்' என்று கூறியது. அரசரான தினகரனும் அவருடைய மனைவி வெந்துருவையும் மகிழ்ந்து, அசரீரி சொன்ன படி சந்திரவதனன் என்ற ஆண்மகனைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

சில மாதங்களுக்கு பிறகு அரசர் தினகரனின் மனைவி வெந்துருவை கர்ப்பமாகி அழகான ஆண்மகன் பிறந்தான். அவன் பெயர் சுதாகன். சுதாகனும் அவருடைய அண்ணன் சந்திரவதனனும் வளர்ந்து வந்த நிலையில் சுதாகனைக் காட்டிலும் வளர்ப்பு மகனான சந்திரவதனன் திறமையாலும், ஆற்றலாலும் சிறந்து விளங்கினான். அதை அறிந்த தந்தை தினகரன் வளர்ப்பு மகனான சந்திரவதன னுக்கு முடிசூட்டி மகிழ்ந்தார்.

சில தினங்களில் தந்தை தினகரனுக்கு விதிப்படி 7 ½ சனி பிடித்து உடல்நிலை மோசமானது. இந்நிலையைக் கண்ட வளர்ப்பு மகன் சந்திரவதனன் ஜோதிடரிடம் சென்று பரிகாரம் கேட்டான். அதற்கு ஜோதிடர், 'சனி பகவானை தரிசித்து வா, உன் தந்தையின் நோய் குணமாகும்' என்று கூறினார். உடனே சந்திரவதனன் தென்னாட்டில் அழகிய பகுதியான மதுரையம்பதிக்கு அருகில் சுரபி நதிக் கரைக்குச் சென்று சனி பகவானின் உருவத்தைக் கற்பனை செய்து, இரும்பால் சனீஸ்வரனின் உருவத்தைச் செய்தான். உருவாக்கிய சனி பகவானைப் பார்த்து 'கடவுளே என் தந்தையின் அனைத்து துயரங்களையும் போக்கி அத்துன்பங்கள் யாவற்றையும் எனக்கு கொடுங்கள்... அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்' என்று வணங்கினான்.

அவன் குரலில் நெகிழ்ந்த சனி பகவான் அவன் முன் காட்சியளித்தார். 'நான் உன் தந்தைக்கு கொடுத்த துயரங்கள் யாவும் அவர் முற்பிறவியில் செய்த பாவங்களுக்காக மட்டுமே. இப்போது உன் வேண்டுதலை ஏற்று, தந்தையின் துன்பங்கள் யாவற்றையும் போக்கி அந்தத் துன்பங்களை உனக்குத் தருகிறேன். உன் நல்ல மனதை எண்ணி நீ வெறும் 7 ½ நாழிகை மட்டுமே துன்பத்தை ஏற்றால் போதும். இதுகூட நீ முற்பிறவியில் செய்த பாவத்துக்காகக் கொடுக்கப்பட்டது தான்' என சனிபகவான் கூறினார். அதன்படியே சந்திரவதனன் சனி பகவானின் அருளைப்பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தான்.

சந்திரவதனன் சுரபி நதிக்கரையில் தோற்று வித்த சனி பகவான் திருவுருவமே குச்சனூர் ஆலய மூலவராக மாறியது. அது இன்றும் வணங்கப்பட்டு வருகிறது. செண்பகநல்லூர் என்று இருந்த ஊரே, சந்திரவதனன் சுயம்பு வடிவ சனீஸ்வரப் பகவானுக்கு குச்சுப் புல்லினால் கோவில் கட்டியதால் குச்சனூர் என்றானது. 2000 வருடங்களுக்கு முன் தோன்றிய கோயில் என்றாலும் இது சுயம்புவாக தோன்றிய காரணத்தினால் இன்று வரை கும்பாபிஷேகம் நடக்கவில்லை.

இந்த ஆலயம் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது. பெரியாறும், சுருளியாறும் இணைந்து உருவானது தான் சுரபி ஆறு. இக்கோயிலில் அரூப வடிவ லிங்கம் பூமியிலிருந்து வளர்ந்துகொண்டே வருவதால் இதைக் கட்டுப்படுத்த மஞ்சள்காப்பு கட்டப் பட்டுள்ளது. குச்சனூர் சனீஸ்வர பகவானை வழிபட நினைப்பவர்கள் தினமும் காலை 6 முதல் 12 மணி வரையிலும் மாலை 4 முதல் 8 மணி வரையிலும் இந்த ஆலயம் சென்று வழிபடலாம்.

சனிக்கிழமைகளில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். 2 ½ ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி விழாவும் சிறப்பாக நடைபெறும். இக்கோயிலில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானை கருங்குவளையாலும், வன்னி இலையாலும் அர்ச்சிக்கலாம். அவரின் வாகனமாக உள்ள காகத்தை வணங்கி உணவிட்டு வழிபட வேண்டும். எள் தீபமிட்டு, கறுப்பு வஸ்திரம் சாத்தி, எள்ளு சாதம் பிரசாதம் வைத்து சனி பகவானின் ஆசிர்வாதத்தை பெறலாம்..

No comments:

Post a Comment