உடல் நலம் : வேலை முக்கியம் தான்; ஆனால் அதைவிட முக்கியம் எது?

Wednesday, September 18, 2019

வேலை முக்கியம் தான்; ஆனால் அதைவிட முக்கியம் எது?

வேலை முக்கியம் தான்; ஆனால் அதைவிட முக்கியம் எது?



எங்களது 21 வருடத் திருமண வாழ்க்கைக்கு பிறகு, முதல் முறையாக எனது மனைவி, நான் வேறொரு பெண்ணுடன் இரவு உணவை பகிர்ந்து  கொள்வதோடு, திரைப்படத்திற்கும் அவளை அழைத்துச் செல்ல வேண்டுமென்ற வினோதமான கோரிக்கையை முன்மொழிந்தாள்.

‘நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் அந்தப் பெண் என்னை விடவும் உங்களை அதிகமாக நேசிக்கிறாள். உங்களோடு ஒரே ஒரு நாள் இரவு உணவையும், ஒரு திரைப்படத்திற்கும், செல்ல விரும்புகிறாள்’ - எனது மனைவி சிபாரிசு செய்த அந்த பெண் வேறு யாருமல்ல, எனது தாய் தான்.

என் அப்பா இறந்துவிட்ட இந்த 19 வருடங்களில் அவள் தனியாகவே தான் வசித்து வருகிறாள். பலமுறை அவளை சந்தித்து வர வேண்டுமென்று நினைத்ததுண்டு. ஆனால், அதீதமான எனது வேலை பளுவாலும், மூன்று பிள்ளைகளுக்கு தகப்பனாகிவிட்ட பொறுப்புணர்ச்சியாலும், என்னால் என் அம்மாவை பல வருடங்களாகவே சந்திக்க முடியவில்லை.

என்னுடைய இயலாமையை என்னுடைய மனைவி சுட்டிக் காட்டியதும், முதல் வேலையாக என் அம்மாவுக்கு போன் செய்து நாளை நாம் இருவரும் ஒன்றாக இரவு உணவை சாப்பிடப் போகிறோம் என்றேன். இந்த எதிர்பாராத நிகழ்வால், வியப்படைந்த என் அம்மா, ‘ஏன் எதுவும் தவறாக நடந்துவிட்டதா?’ என்றாள் அப்பாவியாக.

என் அம்மாவை பொறுத்தவரையில், இரவு நேரங்களில் வருகின்ற எதிர்பாராத அழைப்புகள் கெடுதலின் அறிகுறிகள். ‘இல்லை அம்மா, உன்னோடு சிறிது நேரம் எவ்வித நிபந்தனையுமின்றி கழிக்க விரும்புகிறேன். நாளை இரவு நாம் இருவர் மட்டும் சந்திக்கப் போகிறோம்’ என்றேன். ‘இதுதான் என்னுடைய சமீப காலங்களில் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருக்க முடியும்’ அம்மாவின் நெகிழ்வான குரல் பூரிப்படைந்திருந்தது.

மறுநாள் மாலையில் என் அம்மாவை அழைத்துச் செல்ல, அவளது இல்லத்திற்கு சென்றிருந்தேன். மிக நீண்ட காலவெளிக்கு பிறகு என் அம்மாவை சந்தித்ததால் என் மனம் நிலைகொள்ளாமல் தடுமாறியது.

என் வருகைக்காக தன் வீட்டு வாசலில் நின்றிருந்த அம்மாவின் முகத்திலும் அந்த உணர்வெழுச்சியை பார்க்க முடிந்தது. தன் கடைசி திருமண நாளில் அவள் அணிந்திருந்த அதே ஆடையை அணிந்துகொண்டு மிக அழகாகவே அம்மா அப்போது காட்சியளித்தாள். அவளது முகத்தில் மகிழ்ச்சி அரும்பியது. நகரத்தின் மையத்தில் இருந்த அழகான, எளிமையான உணவு விடுதி ஒன்றிற்கு நாங்கள் சென்றிருந்தோம்.

என் அம்மா எனது கைகளை இறுக பிடித்துக்கொண்டாள். பல வருடங்களாக விடுபட்டிருந்த உறவு மீண்டும் அத்தருணத்தில் புதுப்பிக்கப்பட்டதாக இருவரும் உணர்ந்தோம். அந்த உணவு விடுதியின் அதிக தொந்தரவு இல்லாத ஒரு மூலையில் இருவரும் அமர்ந்து கொண்டோம். என் எதிரில் ஒரு மெனு கார்ட் இருந்தது. அம்மாவால் பெரிய எழுத்துக்களை மட்டுமே படிக்க முடியும் என்பதால், நான்தான் அந்த மெனு கார்ட்டை படிக்கவேண்டியிருந்தது.

 ஒவ்வொரு பண்டமாக என் கண்கள் அந்த மெனு கார்டில் மேலிருந்து கீழாக ஊர்ந்துக்கொண்டிருக்க, சட்டென்று நிமிர்ந்து என் அம்மாவைப் பார்த்தேன். குறும்புத்தனமான சிரிப்புடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தவள், ‘நீ சிறியவனாக இருந்தபோது நான்தான், இதனை எல்லாம் உனக்கு படித்து காண்பித்தேன்’ என்றாள் சந்தோஷமாக. ‘அதற்குதான் இப்போது கைமாறு செய்கிறேன். இது என்னுடைய முறையல்லவா…?!’ என்று பதிலளித்தேன்.

அன்றைய நாளில் நாங்கள் இருவரும் எண்ணற்றவைகளை பகிர்ந்துக்கொண்டோம். சமீப காலங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள், கடந்த காலத்தின் மிச்சங்கள் என நேரம் போனதே தெரியாமல் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். திரைப்படத்திற்குக்கூடப் போக முடியாத வண்ணம், எங்களை விட்டு அகலாமல் அந்த தருணம் எங்கள் மனங்களின் அடியில் நிரந்தரமாக தங்கிவிட்டது.

அவளை அவளது வீட்டில் விடும்போது, ‘இன்னொரு முறை நீ அழைத்தால் நிச்சயமாக வருவேன்’ என்றாள். ‘கண்டிப்பாக’ என்று உறுதியளித்துவிட்டு எனது வீட்டிற்கு திரும்பினேன். ‘உங்களுடைய இரவு உணவு எப்படி இருந்தது?’ இந்த அற்புதமான தருணத்தை எனக்கு உருவாக்கிக் கொடுத்த பெருமிதத்தோடு என் மனைவி கேட்டாள். ‘என் எதிர்ப்பார்ப்புக்கும் மேலாக, மிகவும் மகோன்னதமாக இருந்தது’ என்றேன்.

அதன்பிறகு சில தினங்களில் என் அம்மா இருதய அடைப்பால் இறந்துவிட்டாள். எதிர்பாராத ஒரு தருணத்தில், அவளது துர்மரணம் நிகழ்ந்துவிட்டதால் ஒரு மகனாக நான் ஆற்ற வேண்டிய கடமைகளை கூட என்னால் செய்ய முடியவில்லை. என் அம்மா இறந்திருந்த ஓரிரு தினங்களில் எனக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. அந்த கடித்தத்தோடு, நானும் என் அம்மாவும் உணவருந்திய உணவு விடுதியிலிருந்து பெறப்பட்ட ரசீது ஒன்றும் இருந்தது. அந்த கடிதம் அம்மா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் அவளால் எழுதப்பட்டது. அதில், ‘நான் இந்த பில்லிற்கு முன்னதாகவே கட்டணம் செலுத்திவிட்டேன். இது உனக்கும், உனது மனைவிக்கும். இந்த கடிதம் உன்னை அடையும்போது நான் இருக்கலாம் அல்லது, இல்லாமலும் போகலாம். எனினும் உன் மீதான என் பேரன்பு என்றுமே அழியாதது. நாம் இருவரும் உணவருந்திய அந்த மகிழ்ச்சிகரமான மாலைப்பொழுதை என்றென்றும் நான் மறக்க மாட்டேன். எனக்காக சில மணி நேரங்களை உன் பரபரப்பான பணி அட்டவணைக்கு இடையே ஒதுக்கியதற்காக உனக்கு கோடி நன்றிகள் மகனே’

அன்பின் உன்னத அலையை நான் அந்த நொடியில் உணர்ந்துண்டேன். அன்பான மகிழ்ச்சிகரமான நமது குடும்பத்தை தவிர உலகில் வேறெதுவும் முக்கியமானது இல்லை. நமது குடும்பத்துடன் சில மணி நேரங்கள் எவ்வித வேற்று சிந்தனைகளுமின்றி செலவழிப்பதன் மூலமாகவே நமது வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள முடியும்.

#இணையத்தில் படித்ததில் பிடித்தது,
இவ் எழுத்துக்குச் சொந்தக்காரரின் பெயர் தெரியவில்லை.
தெரிந்தால் கூறுங்கள். பகிர்வோம்.
நன்றி

No comments:

Post a Comment