உடல் நலம் : உடல் நச்சுகளை அகற்ற வேண்டும்... ஏன், எப்படி?

Sunday, September 22, 2019

உடல் நச்சுகளை அகற்ற வேண்டும்... ஏன், எப்படி?

உடல் நச்சுகளை அகற்ற வேண்டும்... ஏன், எப்படி?


``நாம் சாப்பிடும் உணவு கழிவான பிறகு, அது சரியாக வெளியேறாமல் உடலில் தேங்கினால் மலச்சிக்கல் முதல் செரிமானக் கோளாறு வரை ஏராளமான நோய்கள் ஏற்பட அதுவே காரணமாகலாம். அந்தக் கழிவுகள் அல்லது நச்சுகளை நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளைக் கொண்டே மிக எளிதாக அகற்றிவிடலாம். குறிப்பாக ரத்த நாளங்களில் தங்கியிருக்கும் நச்சுகளை அகற்றினால் புத்துணர்ச்சியோடு செயல்பட முடியும்’’ என்கிறார் இயற்கை மருத்துவர் எட்வர்டு பெரியநாயகம்.

``உடல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதுதான் ஆரோக்கியத்தின் அடையாளம். அதற்கு முறையான உணவுகளை உண்ணவேண்டியது அவசியம். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் உடலில் கழிவுகள் தங்குவது அதிகரித்துவருகிறது. இதனால் நம்மில் பலரும் பல்வேறு நோய்த் தொல்லைகளுக்கு ஆளாகிறோம்.

காலையில் கண் விழித்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சைப் பழத்தின் சாற்றுடன் தேன் கலந்து குடித்தால் கழிவுகள் வெளியேறும். ரத்த நாளங்களில் தங்கியிருக்கும் நச்சுகள் அகலும். எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் இதை முயல்வார்கள். அப்போது கெட்ட கொழுப்புகளும் வெளியேற வாய்ப்பிருக்கிறது. ஆனால், இதைக் குடிப்பதால் உறுதியாக எடை குறையும் என்று சொல்லிவிட முடியாது.

இஞ்சியை மையாக அரைத்துச் சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடித்தால், குடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் வெளியேறும். சிலர் காலையில் அருந்தும் டீயில் இஞ்சி சேர்த்து அருந்துவார்கள்; அதுவும் உடலைச் சுத்தமாக்கும். இஞ்சியை நீர் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் கலந்து குடித்தால் கல்லீரலில் கழிவுகள் சேராமலிருக்கும். முழு நெல்லிக்காயுடன் சிறு துண்டு இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு பிழிந்து, வடிகட்டி, தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் மலக்கழிவுகள் வெளியேறும். `நெல்லிக்காய் ஜூஸ்’ என்ற பெயரில் விற்கப்படும் குளிரூட்டி, பதப்படுத்தப்பட்ட பானங்களைத் தவிர்த்துவிட்டு, நாமாக தயாரிக்கும் இயற்கை பானங்களை முற்பகல் வேளையில் அருந்தினால், உடலில் கழிவுகள் தேங்காமலிருக்கும்.

வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும்; உடலில் தங்கியிருக்கும் நச்சுகளை முற்றிலுமாக வெளியேற்றும். எனவே, நமது அன்றாட உணவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது. தினமும் இரண்டு, மூன்று பூண்டு பற்களைச் சாப்பிட்டுவந்தால் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறும்.

மூன்று அல்லது நான்கு கேரட்டுடன் சிறு துண்டு இஞ்சி, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அரைத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்து, மிக்ஸி அல்லது ஜூஸரில் அரைத்து வடிகட்ட வேண்டும். அதனுடன் சிறிது நீர்  அல்லது தேங்காய்ப்பால் சேர்த்துக்கொள்ளலாம். இதை வாரம் ஒருநாள் குடித்தால், உடலில் தங்கியிருக்கும் நச்சுகள் வெளியேறும். இதிலுள்ள இஞ்சி வயிற்றைச் சுத்தம் செய்து, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். மஞ்சளிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும், நச்சுகளை வெளியேற்றவும் உதவும். எலுமிச்சையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் நோய்த்தொற்றை உண்டாக்கும் நச்சுக் கிருமிகளை அழிக்கும். கேரட்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் நச்சுகளுக்கு எதிராகப் போராடும். ஆக, இந்த ஜூஸில் உள்ள எல்லாப் பொருள்களும் நச்சுகளை அகற்றக்கூடியவை.
கடுக்காய்... எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் பலர் அதை பயன்படுத்தியிருக்க மாட்டோம். கடுக்காய் நல்லதொரு கழிவகற்றி மட்டுமல்ல, நச்சகற்றி. ஐந்து கிராம் கடுக்காய்த்தூளை வெந்நீரில் கலந்து இரவு தூங்கப் போவதற்கு முன்னர் குடித்தால்  செரிமானப் பிரச்னை சரியாகும்; மலம் எளிதாக வெளியேறும். கடுக்காயைப்போலவே திரிபலா சூரணமும் கழிவுகளை அகற்றும்.

பீடி, சிகரெட் குடிப்பதால் உடலுக்குள் படியும் நிகோடின் நச்சுப்பொருளை வெளியேற்ற அகத்திக்கீரையைச் சாப்பிடலாம். காலையில் நீராகாரம் குடிக்கும்போது அகத்திக்கீரைப் பொரியல் சாப்பிட்டால், நிகோடின் நச்சு எளிதாக வெளியேறிவிடும். அகத்திக்கீரையை மாதம் ஒருநாள் சாப்பிட்டால் போதும்.

இவை தவிர அன்னாசி, பப்பாளி, உலர் திராட்சை, கொய்யா, சப்போட்டா போன்ற பழங்களை காலை உணவுக்குப் பதிலாகச் சாப்பிட்டால், உடலில் தங்கியிருக்கும் கழிவுகள் எளிதாக வெளியேறும். இளநீர் குடித்தால் ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருள் வெளியேறும். தேங்காய்ப்பால் குடித்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்; நச்சுகள் அகலும்; எடை குறையும்’

No comments:

Post a Comment