உடல் நலம் : முத்தான 10 பாட்டி வைத்தியம்

Saturday, January 18, 2020

முத்தான 10 பாட்டி வைத்தியம்


இன்றைய அவசர வாழ்க்கை முறையில், காய்ச்சல் வந்தாலோ சளி பிடித்தாலோ உடனே மருந்து மாத்திரைகளை வாங்கி விழுங்கும் பழக்கம் அதிகமாகிவிட்டது. 60 வயதைக் கடந்த நான், என் சிறிய வயதிலிருந்து கற்றுக்கொண்ட வீட்டு மருத்துவத்தைத்தான் கடைப்பிடித்து வருகிறேன். ஒருவேளை அப்படிச் செய்து சரியாகவில்லை என்றால் மட்டுமே மருத்துவரை அணுகுவேன். கஷாயம் வைப்பது மாத்திரை போடுவதுபோல் எளிதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், எந்த பின்விளைவுகளும் அதில் இருக்காது. டாக்டரிடம் செல்ல பணமாவது இருக்கும். நேரம்தான் இல்லாமல் போய்விட்டது. சில எளிய பிணிகளுக்கான எளிமையான வைத்தியங்களைப் பின்பற்றி பாருங்கள்... நான் பின்பற்றி நலமானதால் அவற்றை இங்கே பகிர்கிறேன்.

முதலில் நமக்கு அடிக்கடி வரும் சளி காய்ச்சலுக்குப் பாட்டி வைத்தியம் சிலவற்றைச் சொல்கிறேன். சளி இருமல் இதனோடு காய்ச்சல் என்றால் ஒன்றரை டம்ளர் தண்ணீர் எடுத்து அதில் 2 வெற்றிலை, 1/2 தேக்கரண்டி (டீ ஸ்பூன்) சீரகம் , 2 கிராம்பு ,1 ஏலக்காய், 7 மிளகு இவற்றைப்‌போட்டு நன்கு கொதிக்கவிடுங்கள் 3/4 டம்ளர் ஆனதும் பொறுக்கும் சூட்டில் குடியுங்கள். இரண்டுநாள் காலையும் மாலையும் செய்தால், சளி வெளியேறி இருமல்போய் காய்ச்சலும் விட்டுவிடும். அப்படியும் காய்ச்சல் சரியாகவில்லையென்றால் டாக்டரிடம் செல்லுங்கள். தேவைப்படாது என்பதே உண்மை. சிறுவர்களுக்கு இதில் பாதியளவு எல்லாம் போட்டு கொதிக்க வைத்துத் தரலாம். குணமாகும்.

கண்சிவப்பியிருந்தால் அதாவது, வலது கண் சிவந்தால் இடதுகால் கட்டைவிரல் நகத்தின்மேல் வெற்றிலை சுண்ணாம்பைத் தடவி வைத்தும் இடது கண் சிவந்தால் வலது கால் கட்டைவிரல் நகத்தில் சுண்ணாம்பு தடவியும் பூசி வரக் கண்சிவப்பு போகும்.

கண்ணில் நீர் வடிந்து கலங்கி வலித்தால் கொய்யாமர இலைகளை நான்கைந்து பறித்துவந்து தோசைக்கல் அல்லது வாணலியைச் சூடாக்கி அதன்மேல் இலைகளை மாற்றி மாற்றிப் போட்டு கண்மேல் ஒத்தடம் வைக்க, ஒருநாளில் மூன்றுமுறை செய்ய கண்டிப்பாக இந்தப் பிரச்னை சரியாகிவிடும்.

பல் தேய்க்கும்போதும் மாலையில் முகம் கழுவும்போதும் தண்ணீரை கண்களில் அடித்துக் கொள்ளுங்கள். இது கண்களுக்கான சிறந்த தெரபி.

வாயுத் தொல்லையால் முதுகுவலி வந்தால் ஒரு டம்ளர் பாலில் 8 மீடியம் சைஸ் பூண்டெடுத்து மாத்திரைபோல் துண்டுகளாக்கி அது வேகும் வரை நன்கு காய்ச்சி பூண்டை சுவைத்துச் சாப்பிட முதுகுவலி போய்விடும். ரத்தத்தில் சர்க்கரை அளவும் கொலஸ்ட்ரால் அளவும் குறையும். வாயுத் தொல்லையும் குணமாகும். இதயத்துக்கும் நல்லது.

சில பேருக்குக் காலில் தொடையில் அரிப்பு ஏற்படும். சிலபேருக்கு காலில் கறுப்பு நிறத்தில் படையாக ஆரம்பித்து உடம்பு முழுவதும் நமைச்சல் ஏற்படும். இதற்கு எளிதான மருந்து குப்பைமேனி இலையை ஒரு கைப்பிடி எடுத்து மிக்ஸியிலேயே அரைக்கலாம். தண்ணீர் ஊற்றி அரைத்து அதை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைத்து ஆறிய பின் நமைச்சல் இருக்கும் இடத்தில் ஊற்றிக் கழுவிவர குணமாகும். தொடைப்புண் உடனடியாக சரியாகும்.

படிகாரத்தை 5 கிராம் எடுத்து (ஒரு சிறு துண்டு), ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு வைத்தால் கரையும். அதைக்கொண்டுகூட கழுவி வரலாம். இவையெல்லாம் செய்த பின் வேறு தண்ணீர் ஊற்றிக் கழுவாதீர்கள். மருந்து பிடிக்கட்டும்.

கறுப்பு படை நமைச்சலுக்குக் குப்பைமேனி இலையோடு வேப்பிலையும் சேர்த்தரைத்து மஞ்சள் போட்டு பாதிக்கப்பட்ட இடங்களைக் கழுவி வர குணமாகும். இதையெல்லாம் பொடியாக நாட்டு மருந்துக்கடையில் வாங்கிகூட செய்யலாம். இந்தத் தண்ணீரை நாம் ‌குளிக்கும்‌நீரில் கலந்து குளித்துவர உடல் அரிப்பு குணமாகும்.

குதிகால் வலிக்கு நான் சூடான செங்கல்போட்டு பழுத்த எருக்கு இலை போட்டு நிறைய நாள் அதன்மேல் மிதித்தேன். ஆனால், ஒரு சித்த வைத்தியர் சொன்ன யோகா தெரபியில் உடனே நலமானது. ஓரிருநாளில் வித்தியாசம் தெரிய ஆரம்பித்தது. நம் முதுகு, சுவரில் லேசாகப்படுமாறு நின்றுகொண்டு இரு கைகளையும் மேலே உயரத்தூக்கி ( நன்கு நீட்டித் தூக்குங்கள், வளைக்காமல்) பின் நுனிவிரல்களால் நிற்க வேண்டும். முதுகை லேசாக சுவரில் வைப்பது விழாமல் இருக்கவே.

நேராக நின்று செய்யுங்கள். இதன்மூலம் நம் இரத்த ஓட்டம் கால்களில் நன்றாகப் பாய்கிறது. குதிகால் வலிபோகிறது. இதுவும் என் அனுபவமே. இப்படி நிற்பது மூன்று அல்லது ஐந்து நிமிடங்கள் நில்லுங்கள். வயதானால் சர்க்கரை நோய் வந்தால் நம் கால்விரல்கள் மரத்துப் போகும். இந்தப் பயிற்சியை தினம்தோறும் இருமுறை செய்யுங்கள். நல்லது.

குழந்தைகளுக்கோ நமக்கோ காது வலி வந்தால் தேங்காய் எண்ணெய்யில் (1 ஸ்பூன்) 1/2 பூண்டைத் தட்டிப்போட்டு சூடாக்கி ஆறிய பின் காதில் ஊற்ற (மறக்காதீர்கள், ஆறியபின்) காது வலி குணமாகும். கொஞ்சம் காதைச்சுற்றிகூட தேய்க்கலாம். இதனால் காது வலி சரியாகும். இதில் சரியாகவில்லையென்றால் பின் ஏதாவது பிரச்னையென்றால் டாக்டரிடம் போகலாம். சாதாரண காதுவலிக்கு இந்த எளிய வைத்தியம் போதுமானது.

இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். எங்காவது ஏற்படும் வலிகளுக்குத் தேங்காய் எண்ணெய்யில் கட்டிகற்பூரம் பொடித்துப் போட்டு காய்ச்சி வலியிருக்கும் இடத்தில் தேய்த்தால் வலி சரியாகும். முக்கியமாகக் குழந்தைகளுக்கு நெஞ்சில் சளியிருந்தால் நாம் விக்ஸ் தடவிவிடுகிறோம். கொஞ்சம் சோம்பேறித்தனம் பார்க்காமல் இந்தக் கற்பூர தேங்காய் எண்ணெய்யைத் தடவிப்பாருங்கள், நல்ல பலன் கிட்டும். லேசான சூட்டில் தடவுங்கள்.

பச்சைக் குழந்தைகளுக்கு வயிற்றுவலியால் அழுதால் சொல்லத் தெரியாது. தொப்ப்ளைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவ வயிற்றுவலி உடனே நின்றுவிடும். பால் கொடுக்கும் தாய்மார்களின் உணவைப் பொறுத்தே குழந்தைகளுக்கு வயிற்றுவலி ஏற்படும். அது வாயு வயிற்றுவலி என்றால் வசம்பை விளக்கில் காண்பித்து சுட்டு அதன் கரியை நீரில் இழைத்து தொப்புளைச் சுற்றிப் போட வலிபோய் குழந்தை அழுகையை நிறுத்தும். இவையெல்லாம் நிறைய பேருக்குத் தெரியாது.

நமக்கு அஜீரணம் ஏற்பட்டால் லிம்காவையும் கோக்கையும் குடிப்பதற்குப் பதிலாக நீர்மோர் ஒரு டம்ளர் எடுத்து 2 சிட்டிகை பெருங்காயம் 1/4 ஸ்பூன் மிளகு பொடி கலக்கி சாப்பிட அஜீரணம் போகும். புட் பாய்சன் லேசாக ஏற்பட்டால்கூட ஒருநாள் மூன்று முறை இதைக் குடித்து வர சரியாகும். மிகக் கடுமையானால் மட்டும் டாக்டரிடம் சென்றால் போதும்.

நாம் காலையில் வெறும் வயிற்றில் சீரகம் காய்ச்சிய நீரும் (1 டம்ளருக்கு 1/4 டீ ஸ்பூன்) மதிய உணவிவுக்குப் பின் தயிர் கலந்த வெங்காய பச்சடியும் இரவு மேலே சொன்ன பூண்டுபாலையும் சாப்பிட்டு வர இதயநோய் இல்லாமல் நலமோடு வாழலாம். இதயத்தில் பிளாக் ஏற்படாது. ஓரிரு பிளாக் கரைந்துபோகும்.

எப்போதும் புத்தகம் படித்து கணினி பார்த்து டிவி பார்த்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் கண் அயர்ச்சிக்குக் கண்ணிமைகளின் மேல் விளக்கெண்ணெய் தேய்த்து வர கண்களின் அயர்ச்சி போகும்.

ஒரு நாளைக்கு இருமுறை 1 நிமிடம் கண்சிமிட்டலாம். கண்களின் இரு ஓரங்களையும் கண்ணிதழ்களையும் லேசாகத் தடவித்தரலாம். புருவங்களைத் தடவலாம். இவையெல்லாம் கண் பயிற்சிகள்.

நம்மைப் படைத்த இறைவன் நமக்கு வேண்டியதை இயற்கையிலேயே தந்துமிருக்கிறான். மேற்சொன்ன அத்தனையும் ஆபத்தில்லாதது. இந்த எளிமையான வழிமுறைகளை நாம் சோம்பேறித்தனமில்லாது மேற் கொண்டால் டாக்டரிடம் செல்லும் நேரமும் பணமும் மிச்சமாகும்.

No comments:

Post a Comment