உடல் நலம் : பாதத்தில் எரிச்சலா..?

Sunday, February 2, 2020

பாதத்தில் எரிச்சலா..?




உடல் சொல்லும் செய்திக்குக் காது கொடுங்கள்!

உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் ஏதாவது ஒருவிதத்தில் அறிகுறிகளாக வெளிப்படும். தலைவலி, மயக்கம், மலச்சிக்கல், வியர்வை, கால் வலி, இடுப்பு வலி என அந்த அறிகுறிகள் பாதிப்புக்குத் தகுந்தவாறு வேறுபடும்.

அறிகுறிகளை வைத்து பிரச்னையைப் புரிந்துகொண்டு முன்னெச்சரிக்கையாகச் செயல்பட்டால் பாதிப்பின் வீரியத்தைக் குறைத்து உடல் உபாதைகளையும் தவிர்க்கலாம்.  அந்த வகையில் பாத எரிச்சல் என்பது மிகவும் முக்கியமான ஒரு அறிகுறியாகும்.

பாத எரிச்சல் ஏன் ஏற்படுகிறது...

அதன் வழி நம் உடல் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?

"வாழ்வியல் நோய் பாதிப்புகள் இருப்பவர்களுக்கு ஏற்படும் மிகமுக்கியமான அறிகுறிகளில் ஒன்று, பாத எரிச்சல். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்குப் பாத எரிச்சல் பிரச்னை இருக்கும். உடலில் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமானால், நரம்புகள் பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் ஏற்படும். எரிச்சல் ஏற்படுவதற்கு முன், உணர்ச்சியற்று இருப்பது, கூச்சம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று, ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.

* வைட்டமின் குறைபாடு இருப்பவர்களுக்கு, பாத எரிச்சல் ஏற்படலாம். குறிப்பாக, பி 12 குறைபாடு மற்றும் ஃபோலேட் (folate) குறைபாடு இருப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படும். வைட்டமின் பி 12, அசைவ உணவுகளில் அதிகம் இருக்கும். அசைவத்தைத் தவிர்ப்பதோடு, வைட்டமின் 12 நிறைந்த சைவ உணவுகளையும் எடுத்துக்கொள்ளாதவர்களுக்குப் பாத எரிச்சல் ஏற்படலாம்.

* உடல் எடையைக் குறைப்பதற்காக அறுவை சிகிச்சை செய்தவர்கள், அல்சர் பிரச்னை இருப்பவர்கள், பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள், வயிற்றுப் பகுதியில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு ஊட்டச்சத்துகளை உட்கிரகிப்பதில் சில நாள்கள் சிக்கல் இருக்கும். அதனாலும் கூட பாத எரிச்சல் ஏற்படும்.

* சர்க்கரைநோய், உயர் ரத்தஅழுத்தம் காரணமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், அதன் செயல்திறனில் பாதிப்புகள் ஏற்படலாம். இதனால் உடலில் உள்ள நீரைச் சுத்திகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டு நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்பட்டு பாத எரிச்சல் ஏற்படலாம். இது `யுரேமிக் நியூரோபதி' (Uremic Neuropathy) எனப்படுகிறது.

* ஆர்த்ரைட்டிஸ், தொற்றுப் பிரச்னைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றால் நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாவதால் பாத எரிச்சல் ஏற்படலாம்.

* சில நேரங்களில், சிகிச்சையின் பக்கவிளைவாகக்கூட பாத எரிச்சல் ஏற்படலாம். உதாரணமாகப் புற்றுநோய் சிகிச்சையில் அளிக்கப்படும்

கீமோதெரபியின் பக்கவிளைவாகப் பாத எரிச்சல் ஏற்படலாம். காசநோயாளிகள், `ஐ.என்.ஹெச்' (INH) மாத்திரை சாப்பிடும்போது சில நேரங்களில் பக்கவிளைவாக பாத எரிச்சல் ஏற்படலாம்.

* மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு, கால் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு பாத எரிச்சல் ஏற்படலாம்.

* நாம் உண்ணும் சில உணவுகள் மூலம் ஈயம், ஆர்செனிக், பாதரசம் போன்ற ரசாயனங்கள் உடலில் சேர வாய்ப்புள்ளது. இவை, ஊட்டச்சத்துகளைக் கிரகிக்கும் உடலின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.  சமையல் பாத்திரங்கள், பரிமாறும் பாத்திரங்களை நன்கு சுத்தப்படுத்தி பரிமாறுவதன்மூலம் இந்த ரசாயனங்கள் உடலுக்குள் செல்வதைத் தவிர்க்கலாம். ஈயம், தாமிரப் பாத்திரங்களில் நீண்டநேரம் உணவை வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* உடலில் தைராய்டு ஹார்மோனின் சுரப்பு அதிகரித்து நரம்பு மண்டலம் பாதிப்புக்குள்ளாவதாலும் பாத எரிச்சல் ஏற்படலாம். 'ஹைப்போ தைராய்டிசம்' இருப்பவர்களுக்கு, பாத எரிச்சல் அதிகமாக இருக்கலாம். தைராய்டு அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொண்டால் இதைத் தவிர்க்கலாம்.

* தரையைச் சுத்தப்படுத்த பயன்படுத்தும் டிடெர்ஜென்ட், சோப் காலில் நேரடியாகப் பட்டால் அதிலுள்ள ரசாயனங்களால் ஒவ்வாமை ஏற்பட்டு பாதத்தில் எரிச்சல் ஏற்படலாம். அப்படி ஏற்படும்பட்சத்தில் சரும மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டியது அவசியம்.

பாதத்தில் எரிச்சல் ஏற்படுவதில், நரம்பு சார்ந்த பிரச்னைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. எனவே பாத எரிச்சலின் காரணத்தைக் கண்டறிந்து தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது"

No comments:

Post a Comment