உடல் நலம் : அனைத்து பெற்றோர்களுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.

Wednesday, December 4, 2019

அனைத்து பெற்றோர்களுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்.




*நாம் நமது தற்காலக்  குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கத் தவறி விட்டோமா?*

*திரு. நாராயணமூர்த்தி அவர்களின் ஆங்கிலப் பதிவின் தமிழாக்கம் இது.*

அவர் தனது அண்டை வீட்டுக்காரர் தன்னுடன் மன வருத்தத்தோடு பகிர்ந்து கொண்ட விஷயத்தை நமக்குப் பதிவு செய்கிறார்....

*பணி முடிந்து  வெகு தொலைவு பயணம் செய்து களைப்புடன் திரும்பிய நான் என் மனைவியை கடும் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருக்கக் கண்டேன்.*

*எனக்காக அந்த ஜுரத்திலும் சமையல் செய்து உணவை ட்ரேயில் வைத்து மூடி வைத்திருந்தாள். நான் வழக்கமாக உண்ணும் எல்லாவற்றையும் சமைத்து வைத்திருந்தாள்.*

*அவளுக்கு தான் என் மேல் எவ்வளவு கரிசனம். உடல் நலம் சரியில்லாத நேரத்தில் கூட எனக்காக சமைத்து வைத்திருக்கிறாளே.*

*சாப்பிட அமர்ந்த பின் தான் ஏதோ குறைவதை உணர்ந்தேன். டிவி பார்த்துக் கொண்டிருந்த என் வளர்ந்த மகளிடம், "செல்லம் என் மாத்திரையையும் தண்ணீரும் எடுத்துக் கொண்டு வா!" என்று கூறினேன்.*

*அவளை நான் தொந்தரவு செய்ததை விரும்பாமல் கண்ணை உருட்டி அவள் அதிருப்தியைத் தெரிவித்து விட்டு நான் கேட்டதைக் கொண்டு வந்து கொடுத்தாள்.*

*ஒரு நிமிடம் கழித்து சாம்பாரில் உப்பு குறைவாக இருந்ததால் அவளை எடுத்துக் கொண்டு வரப் பணித்தேன்.*

*அவள் 'சை...' என்று கூறிக் கொண்டே காலை அழுத்தமாக வைத்து நடந்து போய்க் கொண்டு வந்து கொடுத்தாள்.*

*அவ்வாறு அவள் செய்தது நிச்சயம் நான் அவளைத் தொந்தரவு செய்ததை அவள் விரும்பவில்லை என்று எனக்குத் தெரிந்தது.*

*நான் சில நிமிடம்  கழித்து மீண்டும் 'செல்லம்' என்று அழைத்தபோது  அவள் கையில் இருந்த டிவி ரிமோட்டை பட்டென்று மேஜையில் வைத்து விட்டு...*

*" அப்பா உங்களுக்கு இப்போது என்ன வேண்டும்? எத்தனை முறை தான்  என்னை எழுப்புவீர்கள்? நானும் தான் நாள் முழுதும்  வேலை பார்த்து விட்டு வந்திருக்கிறேன். எனக்கும் களைப்பாக தான் இருக்கிறது" என்று கூறினாள்.*

*நான் "ஸாரிமா" என்று சொல்லிவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களை எடுத்து சமையலறை சிங்கில் போட்டுவிட்டு என் கண்களில் இருந்து உருண்டோடிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டேன்.*

*என் இதயம் அழுதது.  நான் அவ்வப்போது எனக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது தான்...*

*இந்தக் கால இளைய தலைமுறையினர் ஏன் இது போல் நடந்து கொள்கிறார்கள்? நாம் அவர்களுக்கு அளவுக்கு அதிகமாக சுதந்திரம்   கொடுத்தது  தவறோ?*
 *அவர்களுக்கு நல்லொழுக்கத்தையும் பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கத் தவறி விட்டோமோ?*

*நாம் அவர்களை நண்பர்கள் போல் நடத்தியது தவறோ?*

*அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் பெற்றோர்கள் நாம் மட்டும் தானே. பெற்றோருக்கான கடமையை நாம் செய்யாவிட்டால் வேறு யார் செய்யப் போகிறார்கள்?*

*இன்று... பிறந்த குழந்தைக்குக் கூட சுயமரியாதை இருப்பது குறித்து கவலைப்படுகிறது இந்த உலகம்.*

*ஆனால்  பெற்றோர்களுக்கு மட்டும் சுயமரியாதை இல்லையா?*

*அவர்கள் தங்கள் குழந்தைகளின் ஈகோக்களை வளர்த்து விட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா?*

*இன்றைய பெரும்பாலான பெற்றோர்கள் கூறுவது இதைத்தான்...*

*இந்தக் காலத்தில் எந்தக் குழந்தைகள் பெற்றோருக்குக்  கீழ்படிகிறார்கள்? இதற்குக் காரணம் என்ன?*

*இதேபோல் தான் அன்று ஒரு பார்ட்டியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது என் 50 வயது நண்பர் தன் கார் சாவியை மறந்து போய்க் காரிலேயே விட்டு விட்டு வந்து விட்டதால் தன் டீன் ஏஜ் பெண்ணை எடுத்துக் கொண்டு வரப் பணித்தார்.*

*அவள், "நா...என்ன உனக்கு வேலைக்காரியா? நீயே போய் எடுத்துக் கொள்!" என்றாள்.*

*அவரும் சிரித்துக் கொண்டே "இல்லை...மா! நான் தான் உனக்கு வாழ் நாள் முழுவதும் சேவகன்!" - என்று கூறிக் கொண்டே போய் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்தார்.   இதுவே இன்று சமுதாயத்தில் நடக்கிறது.  இதற்குக் காரணம் என்ன?*

*நாம் நமது குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையைப் பற்றியும் சுயமரியாதையைப் பற்றியும் கற்றுக் கொடுக்க விரும்பினால் முதலில் இதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.  அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பணக்காரர்களாகவும் புகழ்பெற்றவர்களாகவும் இருந்தாலும் அவர்களுடைய பெற்றோர்கள் என்றும் பெற்றோர்கள் தான்.*

*பிள்ளைகள் என்றுமே அவர்கள் பெற்றோருக்கு சமமாக மாட்டார்கள்.*

*பெற்றோருக்கு நான் சொல்ல விரும்புவது இது தான். நீங்கள் உங்கள் குழந்தைகளை நண்பர்களாக நடத்தாதீர்கள்.  அவர்களுக்கு வாழ்க்கையில் ஆயிரம் நண்பர்கள் கிடைக்கலாம். ஆனால் பெற்றோர்கள் நீங்கள் மட்டுமே....*

*அதனால் அவர்களை நீங்கள்  வளர்ப்பதற்கு விதிமுறைகளை வகுப்பதற்கும், அந்த  விதிமுறைகளை அவர்கள்  மதிப்பதற்கு அவர்களைக் கட்டாயப்  படுத்துவதற்கும் ஒரு போதும் அஞ்சாதீர்கள்.*

திரு *நாராயணமூர்த்தி*
ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது...

பாசத்தால் பலவீனப்பட்டுப்போன பெற்றோர்களே... சிந்திப்பீர்.

No comments:

Post a Comment